தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள்

உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றும் ஆப்பிள் - இணையத்தில் லீக் ஆன ரகசிய விவரம்

Published On 2022-05-23 06:51 GMT   |   Update On 2022-05-23 06:51 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் சீனாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் அதிகப்படுத்த தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபோன் மற்றும் இதர உதிரிபாகங்கள் உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

சீனாவுக்கு அடுத்து இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற பகுதிகளில் ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு நாடுகளில் ஆப்பிள் தனது உற்பத்தியை தற்போது இருப்பதை விட அதிகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 



அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனக்கான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றம் செய்யும் முடிவு எடுக்க இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை காரணம் காட்டி சீனாவை உற்பத்திக்காக சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கும் மேற்கத்திய நிறுவனங்களையும் தங்களின் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் மேற்கொள்ளச் செய்யும்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் மேக்புக் லேப்டாப் என 90 சதவீத சாதனங்கள் வெளி நிறுவன உற்பத்தியாளர்களால் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஷாங்காய் மற்றும் சீனாவின் இதர நகரங்களில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவை ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்ய சாதகமான சந்தையாக பார்க்கிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் பெருமளவு உற்பத்தி பணிகளை மிக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும். சில உற்பத்தியாளர்களிடம் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News