தொழில்நுட்பம்

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்க தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ

Published On 2019-02-06 06:42 GMT   |   Update On 2019-02-06 06:42 GMT
இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க தயாராகி வருகிறது. #RelianceJio #Jio5G



இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கும் முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கும் என தெரிகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் 5ஜி தொழில்நுட்ப வசதி கொண்ட மொபைல் போன்களுடன் 5ஜி சேவைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

5ஜி சேவைகளுடன் அதற்கான சாதனங்களை வழங்குவது பற்றிய விவாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா மற்றும் சீனாவில் 5ஜி சேவைகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் வழங்கலாம் என கூறப்படுகிறது.

5ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் ஜூலை மாதத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிகாம் நிறுவனங்கள் தரப்பில் உபகரணங்களை சோதனை செய்யும் பணிகளும் ஏற்கனவே நிறைவுற்றுவிட்டது. 5ஜி சேவை அறிமுகமானதும்  அவற்றுக்கான சாதனங்கள் மற்றும் மொபைல் டெலிபோன் சேவை விரிவடையும். 



முதற்கட்டமாக 5ஜி சேவைகள் ஃபிளாக்‌ஷிப் சாதனங்களில் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ பட்ஜெட் விலை சாதனங்களிலும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் போதுமான சாதனங்கள் இதுவரை வெளியாகாததால் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தன. மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவைகளுடன் புதிய தொழில்நுட்பத்தை இயக்கும் திறன் கொண்ட சாதனங்களையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இதுதவிர சியோமி நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று சாம்சங், ஹூவாய், எல்.ஜி. போன்ற நிறுவனங்களும் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News