தொழில்நுட்பம்

ஆப்பிள் வாட்ச் 4ல் இ.சி.ஜி. வசதி

Published On 2018-12-01 09:43 GMT   |   Update On 2018-12-01 09:43 GMT
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி. எடுக்கும் வசதி வழங்கப்படுகிறது. #AppleWatch


 
ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 4 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் 4 வாட்ச் மாடல்களில் அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்றாக இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் அம்சம் இருந்தது. எனினும், இந்த அம்சம் பயனர்களின் வாட்ச் ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்படாமல் இருந்தது. 

தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களின் படி வாட்ச் ஓ.எஸ். 5.1.2 பதிப்பில் இ.சி.ஜி. வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. உலகின் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்குவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

ஆப்பிள் விற்பனை மைய பயிற்சி அறிக்கைகளில், வாட்ச் ஓ.எஸ். 5.1.2 பதிப்பில் ஆப்பிள் வடிவமைத்த இ.சி.ஜி. ஆப் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செயலி பயனர்களின் இதய துடிப்பை டிராக் செய்து, இதய ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை வழங்கும்.



இந்த அம்சம் வழங்கப்பட்டதும், பயனர்கள் தங்களது புதிய ஆப்பிள் வாட்ச் டிஜிட்டல் கிரவுனை தொட்டு இ.சி.ஜி. சென்சாரை ஆக்டிவேட் செய்யலாம். இனி உங்களது இ.சி.ஜி. பரிசோதனை அறிக்கை 30 நொடிகளில் உங்களின் திரையில் தெரியும். இதோடு வாட்ச் பயனரின் இதய துடிப்பை சீரான இடைவெளியில் தானாக டிராக் செய்து கொண்டிருக்கும்.

பயனரின் ஆரோக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. பயனர்கள் தங்களது இ.சி.ஜி. பரிசோதனை அறிக்கையை மருத்துவர்களுடன் பி.டி.எஃப். வடிவில் பகிர்ந்து கொள்ள முடியும்.

வாட்ச் ஓ.எஸ். 5.1.2 இயங்குதளம் தற்சமயம் பீட்டா முறையில் சோதனை செய்யப்படுகிறது. அனைவருக்கும் வழங்கப்படும் போது, பயனர்கள் இ.சி.ஜி. பரிசோதனையை தாங்களாகவே செய்து கொள்ளலாம். ஆப்பிள் புதிய அப்டேட் எப்போது வழங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. #AppleWatch 
Tags:    

Similar News