உலகின் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - ஹானர் அசத்தல்
- ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8mm தடிமன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஹானர் மேஜிக் V5 அறிமுகம் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் நடைபெற உள்ளது.
ஹானர் மேஜிக் V5 அடுத்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, சீன நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதில் அதன் வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்களை வெளிப்படுத்துகிறது.
வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஹானர் மேஜிக் V5 மெல்லிய டிசைன் கொண்டிருக்கும். மேலும் 16 ஜிபி வரை ரேம் மற்றும் அதிகபட்சம் 1TB ஸ்டோரேஜ், நான்கு வண்ண விருப்பங்களில் விற்ப்பனைக்கு வரும்.
ஹானர் மேஜிக் V5 சிறப்பம்சங்கள்:
ஹானர் நிறுவனம் அதன் வெய்போ மற்றும் சீனா வலைதளத்தில் ஹானர் மேஜிக் V5 வடிவமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த போன் டான் கோல்ட், சில்க் ரோடு டன்ஹுவாங், வெல்வெட் பிளாக் மற்றும் வார்ம் ஒயிட் (சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) வண்ண விருப்பங்களில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி + 256 ஜிபி, 16 ஜிபி + 512 ஜிபி மற்றும் 16 ஜிபி + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8mm தடிமன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் இது உலகின் மிக மெல்லிய மற்றும் இலகுவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் எடை குறித்த விவரங்களை ஹானர் வழங்கவில்லை. மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் வரவிருக்கும் விவோ X ஃபோல்ட் 5 ஐ விட மெல்லியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மடிக்கும்போது 9.2mm தடிமன் கொண்டிருக்கும்.
ஹானர் மேஜிக் V5 அறிமுகம் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் நடைபெற உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் 16 ஜிபி ரேம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் IPX8-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பு மற்றும் 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,100mAh பேட்டரி இருக்கும். இந்த கைபேசியில் 6.45-இன்ச் LTPO OLED கவர் திரை மற்றும் 8-இன்ச் 2K இன்னர் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.