- கடன் வழங்குவதற்கும், பெறுவதற்கும் ஒப்பந்தம் அவசியமாகும்.
- சாட்சிகள் இல்லாமல் கடன் கொடுக்கல், வாங்கல் நடைபெறக்கூடாது.
மனித வாழ்க்கையில் நன்மையான விஷயங்களில் ஒருவருக்கொருவர் கைகோர்ப்பது தார்மீகப்பலத்தை கூட்டும். ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும். இதைத்தான் திருக்குர்ஆன், நபிமொழிகள் பல இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
திருக்குர்ஆன் (5:2) கூறுகிறது: 'இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள், நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்'. மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தை தக்க வைத்துள்ள கடன், வாழ்வின் ஒரு அங்கமாக உருமாறிப் பல கட்டங்களை கடந்து செல்கிறது. கடன் கொடுக்கல், வாங்கலின் சட்ட வரையறைகளை திருக்குர்ஆன், நபிமொழிகளின் ஒளியில் காண்போம்.
கடன் வழங்குவதற்கும், பெறுவதற்கும் ஒப்பந்தம் அவசியமாகும். இருவருக்கும் கடனுக்கானப் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று தவணைக்கான கால நேரங்கள் நிர்ணயம் செய்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதை, நியாயமானவரைக் கொண்டு எழுதிக்கொள்ளுதல் கட்டாயம்.
தவணை காலம் இருவருக்கும் ஒத்துப்போகும் வேளையில், கடன் பெறுகிறவர் தெளிவான முறையில் எழுத வேண்டும், (அல்லது) கூற வேண்டும். கடன்தொகை பெரிதோ-சிறிதோ, தவணை விஷயங்களில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும். எந்த வகையிலும் இருவருக்கும் மனபேதங்கள் ஏற்படும் வகையில் வாசகங்கள் இடம் பெறக் கூடாது. எழுதுவதும், கூறுவதும் வாக்குமூலமாகும். அதில் கவனம் கொள்ளுதல் அவசியமாகும். கடன் வழங்குபவரை ஏமாற்றும் நோக்கத்தில் கடன் பெறுவது பெரும்பாவத்தின் வாயிலில் நம்மை நிறுத்திவிடும்.
சாட்சிகள் இல்லாமல் கடன் கொடுக்கல், வாங்கல் நடைபெறக்கூடாது. இதை திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. சாட்சியாளர்களின் நியமனத்தில் இருவருக்கும் தெளிவு வேண்டும். நியாயத்தின் நிழலில் நீதி வழங்கும் நீதிமான்களைத் தேர்வு செய்தல் வேண்டும். ஆண்களில் இரண்டு நபர்கள் நியமிக்கப்படுதல் கட்டாயம். அவ்வாறு இல்லாவிட்டால், ஆண் ஒருவரும், பெண்கள் இருவரும் இடம்பெற வேண்டும்.
கடன் வழங்கியவருக்கும், பெற்றவருக்கும் பிணக்கு ஏற்படுமாயின் சாட்சிக் கையொப்பமிட்டவர்கள் சாட்சிகூற மறுக்கக் கூடாது. நியாயத்தைக் கோடிட்டுக் காண்பிக்க வேண்டும். அதில், நீதி தவறும்போது அல்லாஹ்வின் பிடி கடுமையாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இக்கட்டான சூழ்நிலையில் பெற்றக் கடனை அதன் தவணைக்குள் செலுத்த வேண்டும். நிர்ப்பந்தமான சூழ்நிலையில் சரியான காரணம் தெரிவித்து கால நீட்டிப்பைப் கோரலாம். மன்னிப்பு இல்லா பாவங்களின் வரிசையில் கடன் இடம் பெறுவதால் கூடுதல் கவனம் செலுத்துவது கடமையாகும். கடனோடு மரணித்த ஒருவரின் ஜனாஸாவுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க மறுத்து விடுகின்றார்கள், உடனே அபூகதாதா (ரலி) பொறுப்பேற்றதும் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள் என்ற செய்தியை நபி மொழியில் காண முடிகின்றது. இதில் வாக்குறுதியை நிறைவேற்றுதல் அவசியமாகும்.
தவணைக்காலம் முடிந்த நிலையில் வழங்கிய கடனை வசூல் செய்வதில் கடுமை காட்டக்கூடாது. அவர்களின் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவகாசம் வழங்குவது நன்மை பயக்கும். மிகவும் ஏழ்மை நிலையைக் கண்டால் கடனை தள்ளுபடி செய்தல் சாலச் சிறந்தது என்பதை நபிமொழிகள் நமக்குக் போதிக்கின்றன.
"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு மனிதர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் மக்களிடம் கொடுக்கல்-வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும் போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்' என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது". (அறிவிப்பாளர்: ஹுதைபா (ரலி).
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை கடன் என்ற அரக்கன் பிடியிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். கடனோடு மரணிப்பது சுவனத்தை விட்டு தூரமாக்கிவிடும். நாளை நம் சந்ததியினரைப் பாதித்து விடும். கடனில்லாத மரணத்தைச் சந்திக்கக் கடனில்லாமல் வாழப்பழகுவோம்.
"மூன்று குணங்களை விட்டு நீங்கியவராக யார் மரணிப்பாரோ அவர் கண்டிப்பாகச் சொர்க்கம் செல்வார். 1) பெருமை, 2) கடன், 3) மோசடி. (அறிவிப்பாளர்: சவ்பான் (ரலி), நூல்:திர்மிதி)
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது எப்பொழுதும் கடனிலிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டிருப்பார்கள். நாமும் அதுபோல கடன்களில் இருந்து ஏக இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவோம்.