- சிவபெருமானின் தீவிர பக்தரான சுந்தரர், திருவாரூரில் இருந்து ஒவ்வொரு ஊராக சென்று கோவில்களில் பாடி வந்தார்.
- கிராம கோவில்களை போலவே இங்கும் குதிரை சுதை சிற்பங்கள் உள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் அமைந்துள்ளது வேடப்பர் திருக்கோவில். முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் முருகப்பெருமான், வேடப்பர் என்ற திருநாமத்துடன் வள்ளி - தெய்வானை சமேதராக அருள்பாலிக்கிறார்.
சிவபெருமானின் தீவிர பக்தரான சுந்தரர், திருவாரூரில் இருந்து ஒவ்வொரு ஊராக சென்று கோவில்களில் பாடி வந்தார். அதன்படி விருத்தாசலம் வந்த சுந்தரர், விருத்தகிரீஸ்வரர் (பழமலைநாதர்) கோவிலுக்கு செல்லவில்லை. அது மிகவும் பழமைவாய்ந்த கோவில். எனவே அங்கு சென்றால் தனக்குரிய பலன் கிடைக்காமல் போகலாம் என்று எண்ணி, அந்த கோவிலை தவிர்த்தார்.
கோவில் தோற்றம்
இதையடுத்து பழமலைநாதர், தன்னை பாடாமல் சென்ற சுந்தரரை எப்படியாவது பாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே, தன்னை வணங்காமல் சுந்தரர் இந்த ஊரை விட்டு வெளியேறுவதை தடுக்குமாறு, தன் மைந்தனான முருகப்பெருமானுக்கு உத்தரவிட்டார். அதன்படி முருகப்பெருமான், மேற்கில் கொளஞ்சியப்பராகவும், தெற்கே பெண்ணாடம் சாலையில் வேடப்பராகவும், வடக்கே கண்டியங்குப்பத்தில் வெண்ணுமலையப்பராகவும், கிழக்கே கோமாவிடந்தலில் கரும்பாயிரம் கொண்டவராகவும் நான்கு புறமும் சுந்தரரை மடக்கினார். பின்பு அவரிடம் இருந்த பொன், பொருளை பறிமுதல் செய்து, அவரை பழமலைநாதரிடம் ஒப்படைத்து பாட வைத்ததாக தல வரலாறு கூறுகிறது.
முருகப்பெருமான், பெண்ணாடம் சாலையில் வேட்டைக்காரனாக (கொள்ளைக்காரன்) மாறுவேடமிட்டு வந்ததால், இத்தல இறைவன் 'வேடப்பர்' என்று அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் கல்வெட்டுகள் எதுவும் இல்லாததால், கோவில் கட்டுமான காலத்தை கண்டறியமுடியவில்லை. கோவிலில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. பிரகாரத்தில் கிராம தெய்வங்களான முனீஸ்வரர் மற்றும் கருப்பசாமி ஆகியோர் காணப்படுகிறார்கள். கிராம கோவில்களை போலவே இங்கும் குதிரை சுதை சிற்பங்கள் உள்ளன. கருவறையை நோக்கி முருகனின் வாகனமான மயிலும், உயர்ந்த பீடத்தில் பலிபீடமும் காணப்படுகின்றன. கோவில் தல விருட்சமாக உகா மரமும், தீர்த்தமாக மணிமுத்தாறு ஆறும் உள்ளன.
கொளஞ்சியப்பர் கோவிலை போல, இக்கோவிலிலும் பிராது கட்டும் வழக்கம் உள்ளது. கோவில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.