வரலட்சுமி விரதமும் பூஜை முறையும்
- ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும்.
- குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் சுமங்கலிப் பெண்கள் பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து அழகாக அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையை மெழுகி கோலமிட்டு மண்டபம் அமைக்க வேண்டும். அதன்பின் வரலட்சுமியின் படம் வைத்து, அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். வரலட்சுமி படத்தின் முன்னர் ஒரு வாழை இலையை விரித்து, அதன்மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். அதன்மேல் தேங்காய், எலுமிச்சை, பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.
ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும். அந்த கலசத்தில் அரிசியை நிரப்பி, அதன் மேலே குங்குமம் தடவிய முழுத் தேங்காயை வைக்க வேண்டும். அந்த கலசத்தை இலையில் பரப்பிய அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பூஜையில் மஞ்சள் தடவிய ஒன்பது இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்பு சரடை வைக்க வேண்டும். மஞ்சள் கயிறு என்பது மங்கலத்தின் அறிகுறி ஆகும். வரலட்சுமியுடன் அஷ்ட லட்சுமிகளையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் மீது மகாலட்சுமியின் முக பிம்பத்தை பதிக்கலாம். முதலில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். பின்பு வரலட்சுமி தேவிக்கான பாடலை பாடி, பூக்களை தூவி தீபங்கள் காட்ட வேண்டும். பூஜையின் முடிவில் ஒன்பது முடிச்சு போட்ட மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு அனைவருக்கு பிரசாதங்கள் வழங்கலாம்.
வரலட்சுமி விரதமிருந்து வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளான ஆதி லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெய லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, வித்யா லட்சுமி ஆகியோரை வணங்கிய பலன்கள் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம்.
வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால், மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும், குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். வரலட்சுமியை வழிபட்டு அஷ்ட ஐஸ்வரியங்களையும், வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறுவோம்.