பிறவி பாவங்கள் போக்கும் வைகுண்ட ஏகாதசி
- போரில் பின்வாங்குவது போன்று நடித்து, ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார்.
- மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வந்தார்.
பெருமாளின் அருளை வேண்டி கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஏகாதசி விரதமும் ஒன்று. அனைத்து விரதங்களிலும் மிகவும் உயர்வான விரதமாக ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி திதியில் தொடங்கி துவாதசி திதியில் முடியும். இந்த விரதத்தை பய பக்தியுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை ஏகாதசி வருகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்து வழிபட்டால் பெருமாளின் அருளைப் பெற முடியும். மாதத்திற்கு 2 முறை என வருடத்திற்கு 24 முறை வரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த மாதமான மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டால் வருடத்தில் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலனைப் பெறலாம்.
ஏகாதசி பிறந்த வரலாறு
ஒரு சமயம் முரண் என்ற அசுரன், பல ஆண்டுகளாக கடுந்தவம் இயற்றி, இறைவனிடம் இருந்து பல அரிய வரங்களை பெற்றுக்கொண்டான். அதனால் மிகுந்த பலம் பெற்ற அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் மிகவும் துன்புறுத்தினான். இதனால் கவலை அடைந்த தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். எப்படியாவது முரணை அழித்து, தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டினர். மகாவிஷ்ணுவும் அனைவரையும் காக்கும் பொருட்டு அரக்கனை அழிப்பதாக உறுதி அளித்தார்.
அதன்படி, முரண் அசுரனுடன் போரிட்டார் மகாவிஷ்ணு. பல ஆண்டுகளாக கடுமையாக போரிட்டும் மகாவிஷ்ணுவால் முரணை கொல்ல முடியவில்லை. காரணம், பல வரங்களை பெற்றிருந்த முரண், 'தனக்கு பெண்ணால் மட்டும் தான் மரணம் நிகழ வேண்டும்' என்ற வரத்தையும் கொண்டிருந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு, இனியும் போர் புரிந்து பயனில்லை என்பதை உணர்ந்தார்.
இதையடுத்து போரில் பின்வாங்குவது போன்று நடித்து, ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார். விஷ்ணு இருக்கும் இடத்தை அறிந்து, அவரை கொல்ல குகையை நோக்கி வந்தான் முரண். அப்போது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு சக்தி தோன்றி, ஒரு அழகான பெண்ணாக மாறியது.
அந்த பெண் முரணுடன் போரிட்டு கொன்றாள். இதையடுத்து, அசுரனை அழித்த அந்த பெண்ணுக்கு 'ஏகாதசி' என்று மகாவிஷ்ணு பெயர் சூட்டினார். மேலும் இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வரமளித்தார். அதன்படியே அந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சொர்க்க வாசல்
ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்ம தேவருக்கு கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை ஒடுக்க நினைத்தார் மகாவிஷ்ணு. பிரம்ம தேவரின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அதன்படி ஊழிக்காலம் தொடங்கியதும், பிரம்ம தேவர் மகாவிஷ்ணுவின் தொப்பிள் கொடியில் இருந்த தாமரையில் அடங்கினார். அப்பொழுது, மகாவிஷ்ணுவின் காதுகளில் இருந்து மது, கைடபர் என இரண்டு அசுரர்கள் தோன்றினர். இருவரும் கடும் தவம் புரிந்து இறைவனிடம் இருந்து பல வரங்களை பெற்றுக்கொண்டனர்.
பிரளயக் காலம் முடிந்து, மீண்டும் உலக உயிர்களை தோன்றுவிக்க பிரம்மன் வந்தார். அப்போது பிரம்மாவிடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களை மது, கைடபர் அசுரர்கள் திருடி சென்றனர். இதையடுத்து, பிரம்மதேவர் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வந்தார்.
பின்னர் இரண்டு அசுரர்களும் தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினர். இதனால் மிகவும் வருந்திய தேவர்கள், உலக உயிர்களை காத்து அசுரர்களை அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். இதையடுத்து மகாவிஷ்ணு, மது, கைடபருடன் போரிட்டு அழித்தார். மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியவர்கள் என்பதால், இருவரும் வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெற்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் வைகுண்டம் சென்றது மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ஆகும்.
வைகுண்டம் சென்ற அவர்கள் மகாவிஷ்ணுவிடம், ''உங்களிடம் இருந்து உருவான எங்களுக்கு உங்கள் கருணையால் இந்த பாக்கியம் கிடைத்தது போன்று, பலரும் இந்த பலனை பெற அருள வேண்டும்'' என வேண்டினர். அதோடு ''மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் வழியாக வந்து வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டும்'' என்று கேட்டனர். அதன்படியே, பகவானும் அருள் வழங்கினார். இதன்பொருட்டே பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதம்
பெருமாளுக்கு மேற்கொள்ளப்படும் விரதங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது பகல் பத்து, இரா பத்து என்று இருபது நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதம் மூன்று நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது தசமி திதியில் தொடங்கி, ஏகாதசி திதியில் விரதம் இருந்து, துவாதசி திதியில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இன்று (30-12-2025) செவ்வாய்க்கிழமை வருகிறது.
இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று பகலில் மட்டும் உணவருந்த வேண்டும். ஏகாதசி அன்று, அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் எந்தவித உணவையும் உட்கொள்ளக்கூடாது. ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இதில் இருந்து விலக்கு உண்டு.
ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை தரிசிக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் இரவு முழுவதும், தூங்காமல் கண் விழித்து இருந்து புராணங்கள், பெருமாளுக்குரிய பாடல்கள், இறைவனின் நாமங்கள் போன்றவற்றை படிக்க வேண்டும். மறுநாளான துவாதசி அன்று இறைவனுக்கு நைவேத்தியங்கள் படைத்துவிட்டு, பின்பு உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், வீட்டில் இருந்தோ அல்லது கோவில்களுக்கு சென்றோ விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
ஒருவரால் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக வேறொருவர் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். இதன்மூலம் இந்த விரதத்தின் முழுபயனும் யாருக்காக அந்த விரதம் இருக்கிறோமோ அவருக்கே போய் சேர்ந்துவிடும்.
பொதுவாக எந்த விரதமாக இருந்தாலும் தீட்டு காலங்களில் அந்த விரதத்தை மேற்கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால் வைகுண்ட ஏகாதசி விரதத்தை தீட்டு காலங்களிலும் மேற்கொள்ளலாம் என்பதே இந்த விரதத்தின் தனிச் சிறப்பாகும்.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு, பாவங்கள், பலவிதமான துன்பங்கள் போன்றவை நீங்கி செல்வ வளம் பெருகும். இந்த பிறவியில் மட்டுமல்ல ஏழு பிறவிகளில் செய்த பாவங்களையும் போக்கலாம். இத்தனை சிறப்புகளை உடைய வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாளின் நாமத்தை மனதில் நிறுத்தி, வழிபட்டு இறைவனின் முழு அருளையும் பெறுவோம்.