இறைவன் ஜோதியாக காட்சி தரும் திருக்கார்த்திகை
- கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும்.
- தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் திருகார்த்திகை விரதம் இருந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.
இந்து மதத்தில், இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். பலர், தினமும் அதிகாலையில் இறைவனுக்கு விளக்கேற்றிவிட்டுதான், தங்கள் அன்றாட பணிகளை தொடங்குகிறார்கள். தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அல்லது சிறப்புமிக்க விழா நாட்களிலாவது தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். ஆனால் தீபத்தையே இறைவனாக நினைத்து போற்றி வழிபடும் அற்புதமான நாள்தான், திருக்கார்த்திகை தீபத் திருநாள்.
திருக்கார்த்திகை நாளில், கோவில்கள் மற்றும் வீடுகளில் வரிசையாக தீபங்களை ஏற்றி இறைவனை வழிபடுகிறார்கள். அன்றைய தினம், வீடு முழுவதும் ஒளியால் பிரகாசமடைந்து மனம் மகிழ்ச்சி அடைகிறது. தீப ஒளியானது எவ்வாறு இருளை நீக்கி ஒளியை பரப்புகிறதோ, அதேபோல நம் வாழ்வில் இருக்கும் துன்பங்கள், பிரச்சினைகள் எனும் இருள் நீங்கி, மகிழ்ச்சி எனும் ஒளியை பரப்புகிறது.
கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினம், நாம் இன்முகத்தோடு ஏற்றும் தீபமானது, நம் வாழ்வில் இன்பத்தை வாரி வழங்கும். கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள், 3-12-2025 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.
திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்..
ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். இதனால் உலகமே இருளில் மூழ்கியது. உயிர்கள் அனைத்தும் துயரத்தில் வாடின. இச்செயலால் பார்வதி தேவிக்கு பாவம் ஏற்பட்டது. இதையடுத்து பார்வதி தேவி பாவவிமோசனம் வேண்டி, காஞ்சிபுரத்திற்கு வந்து சிவபெருமானை நினைத்து கடுந்தவம் புரிந்தார்.
அப்போது பார்வதி தேவிக்கு காட்சி அளித்த சிவபெருமான், திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலைக்கு வரும்படி அருளினார். சிவபெருமானின் கட்டளைப்படியே திருவண்ணாமலை வந்தார் பார்வதி தேவி. அங்குள்ள பவளக்குன்று மலையில் வசித்து வந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் இயற்றினார். கார்த்திகை மாதம், பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் நாளில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஜோதி வடிவில் காட்சி அளித்தார். பின்பு, தன் உடலின் இடப்பாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். அந்த நாளே திருக்கார்த்திகை என்று கொண்டாடப்படுகிறது.
ஒரு சமயம் கயிலாயத்தில் நெய் தீப விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கு அணையும் தருவாயில், அங்கு ஒரு எலி வந்தது. விளக்கில் இருந்த நெய்யின் வாசனையை அறிந்த எலி, அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது. அப்போது அந்த திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. உடனே, அந்த எலியின் முன் தோன்றிய சிவபெருமான், மானிடப் பிறவி எடுத்து, ராஜயோக வாழ்வு வாழும்படி அருள் வழங்கினார். அந்த எலிதான் மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்தது என்று கூறப்படுகிறது.
எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியாக இருந்த மகாபலி சக்கரவர்த்திக்கு கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒரு நாள் அகங்காரத்துடன் கோவிலுக்கு சென்ற அவர், பட்டாடைகள் தரையில் புரள அலட்சியமாக நடந்தார். அப்போது மகாபலி சக்கரவர்த்தியின் பட்டாடை, அங்கிருந்த அகல் விளக்கின் மீது பட்டு தீப்பற்றி எரிந்தது. இதனால் அவரின் உடலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனது ஆணவத்தை எண்ணி வருந்திய சக்கரவர்த்தி, இறைவனை இருகரம் கூப்பி வணங்கி பிரார்த்தனை செய்தார். தனது உடம்பில் ஏற்பட்ட தீ காயம் குணமடைய அருள்புரியுமாறு வேண்டினார்.
உடனே இறைவன், "நீ நாள்தோறும் கோவிலில் விளக்குகளை வரிசையாக ஏற்றி, என்னை வழிபடு. காலப்போக்கில் உனது காயம் குணமடையும்" என்று அசரீரியாக கூறினார்.
அதன்படி மகாபலி சக்கரவர்த்தி தினமும் கோவிலுக்கு சென்று, விளக்குகளை வரிசையாக அடுக்கி தீபம் ஏற்றி வழிபட்டார். இவ்வாறு தொடர்ந்து வழிபட, கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் மனம் இரங்கி மன்னனுக்கு காட்சி அளித்தார். ஜோதி வடிவில் ஒளிப்பிழம்பாய் காட்சி அளித்த இறைவன், மன்னனின் நோயை நீக்கி அருள் வழங்கினார். இவ்வாறு தொடங்கிய தீப வழிபாடே, திருக்கார்த்திகை திருநாளாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
திருக்கார்த்திகை விரதம்
கார்த்திகை தீப திருவிழா என்பது நமது பாரம்பரிய வழிபாடுகளில் ஒன்றாகும். பொதுவாக கார்த்திகை மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படுகிறது. இருப்பினும் திருக்கார்த்திகை நாளன்று ஏற்றப்படும் தீப வழிபாடு தனிச் சிறப்பாகும். அன்றைய தினம் பல வகையான விளக்குகளால் தீபங்கள் ஏற்றினாலும், மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
திருக்கார்த்திகை தினத்திற்கு முதல் நாள் பரணி நட்சத்திரம் வருகிறது. அன்றைய தினம் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் காலையில் மட்டும் உணவு சாப்பிட வேண்டும். மறுநாள் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு இறைவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவு உண்பதை தவிர்த்துவிட்டு, தண்ணீர் மட்டுமே பருக வேண்டும். பின்பு, இரவு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். பின்பு மறுநாள் காலையில் நீராடிவிட்டு பால் அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் திருகார்த்திகை விரதம் இருந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். அவர்களின் சந்ததியினர் நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
திருக்கார்த்திகை தினத்தன்று, ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வசதிக்கேற்ப விதவிதமாக, பல்வேறு எண்ணிக்கையில் அகல் விளக்கு தீபம் ஏற்றுகிறார்கள். முதலில் வீட்டின் வாசலில் உள்ள கோலத்தின் நடுவில் விளக்கேற்ற வேண்டும். பின்பு, வீட்டு வாசல், பூஜை அறை என வீடு முழுவதும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றலாம். ஜோதி வடிவான இறைவனை நாம் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். லட்சுமி கடாட்சம் ஏற்படும். வாழ்வில் பிரகாசமான எதிர்காலம் உண்டாகும்.