சிவக்கொழுந்தீஸ்வரர் - ஒப்பிலாநாயகி
null
தம்பதிக்கு அருள்புரிந்த தீர்த்தனகிரி சிவன்
- ஒரு நாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினார்.
- கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் திருத்தினைநகர் எனும் ஊரில் அமைந்துள்ளது சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் திருத்தலமாகும். இத்தல இறைவன் சிவக்கொழுந்தீஸ்வரர் என்றும், இறைவி ஒப்பிலாநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மிகுந்த சிவ பக்தி கொண்ட ஒரு விவசாயத் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள், தினமும் சிவபக்தர் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின்புதான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு நாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினார். அதன்படி, எந்த சிவ பக்தரையும் அவரது வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.
இதனால் மிகவும் மனம் வருந்திய விவசாயி, தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக முதியவர் ஒருவர் வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
அதற்கு முதியவர் அவரிடம், ''நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடு. அதற்கு கூலியாக வேண்டுமானால் நான் சாப்பிடுகிறேன்'' என்றார். இதற்கு விவசாயியும் ஒப்புக்கொண்டார். அதன்படி, தன் தோட்டத்தை உழும்படி கூறினார், விவசாயி. முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர்.
அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த அற்புதக் காட்சியைப் பார்த்த விவசாயி அதிசயித்து போனார். பின்பு சந்தேகத்துடன் அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் முதியவருக்கு சாதம் பரிமாறினார். முதியவரும் மகிழ்ச்சியுடன் விவசாயி அளித்த உணவை சாப்பிட்டார்.
பின்பு அவரிடம், ''ஒரே நாளில் எப்படி பயிர் விளைந்தது?'' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். முதியவர் சிரித்தபடி, சிவனாக சுயரூபம் காட்டி, அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால், இத்தலத்துக்கு 'தினைநகர்' என்ற பெயர் வந்தது. அதுவே தற்போது, 'தீர்த்தனகிரி' என்று அழைக்கப்படுகிறது. வயலில் இறங்கி வேலை செய்ததால் இத்தல சிவபெருமானுக்கு 'விவசாயி' என்ற பெயரும் உண்டு.
மகரிஷி ஒருவர் முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்றார். அவர் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்தில் உள்ள தீர்த்தம் 'ஜாம்புவதடாகம்' என்று அழைக்கப்படுகிறது.
கோவில் தோற்றம்
கோவில் அமைப்பு
கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோபுர வாசலுக்கு முன்பாக கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை காணலாம். இத்தலத்தில் சிவபெருமான், சுயம்பு லிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அவர் நிலத்தை உழ பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. கோவில் வெளிப்பிரகாரத்தின் வலதுபுறத்தில் ஒப்பிலாநாயகி அன்னை தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் மனைவியுடன் காட்சி தருகிறார். விநாயகர் புடைப்பு சிற்பமாக காணப்படுகிறார். அவரை நான்கு பூதகணங்கள் வணங்கியபடி உள்ளனர். விஷ்ணு, துர்க்கைக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சுப்பிரமணியர், நால்வர், வீரசேன மன்னன் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன. கோவில் தல விருட்சமாக கொன்றை மரம் விளங்குகிறது. கோஷ்ட மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர்.
திருவிழா
ஆலயத்தில் வைகாசி மாதம் 13 நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், பிரதோஷம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் ஆகியவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் 20-ந் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துக்கின்றனர்.
கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கடலூரில் இருந்து புவனகிரி செல்லும் சாலையில் சென்றால் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் வரும். அங்கிருந்து உள்ளே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.