பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- சபரிமலையில் நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு
- கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் “ஸ்பாட் புக்கிங்” எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
- கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக கூட்ட நெரிசல் இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 70 பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவின் பேரில், கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் தற்போது பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் தினமும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மதியம் ஒரு மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 45 நிமிடங்கள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.