கொங்கு திருவண்ணாமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன?
- கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு.
- மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
சிவ வழிபாட்டில் நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாக கருதப்படுவது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட திருவண்ணாமலை தலத்துக்கு இணையான கோவில் கொங்கு மண்டலமான கோவையில் உள்ளது. அந்த கோவில் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்.
கொங்கு திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த கோவில் கோவை- பாலக்காடு சாலையில் குனியமுத்தூரை தாண்டியதும் மதுக்கரை மரப்பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 1600 அடி உயரமுள்ள மலை உச்சியில் கோவில் அமைந்திருப்பது சிறப்பானது. இந்த மலை தர்மலிங்க மலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு. திருவண்ணாமலைக்கு அடுத்து அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லும் ஆலயமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இதனால் கொங்கு திருவண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
அதேசமயம் வனவிலங்குகள் நடமாட்டம் கருதி பவுர்ணமி தினத்தில் மட்டும் கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஏற்றுவது போல் இங்கும் கார்த்திகை திருவிழாவின் போது மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
தர்மலிங்கேஸ்வரர் பெயர்க்காரணம்
பஞ்சபாண்டவர்கள் காலக்கட்டத்தில் பாண்டவர்களில் மூத்தவரான தருமன் இங்கு வந்து ஈஸ்வரனை தவமிருந்து வழிபட்ட காரணத்தால் சுவாமி, தர்மலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதன்காரணமாக மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
சுயம்பு மூர்த்தி
தர்மலிங்கேஸ்வரர் மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான பசுமாடு காணாமல் போய் இருக்கிறது. அந்த பசுவை தேடி விவசாயி மலை உச்சிக்கு சென்று இருக்கிறார். அங்கு சுயம்புலிங்கத்திற்கு மாடு பால்சொரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஊர் முழுக்க பரவி அதன்பிறகே பக்தர்கள் வழிபடத் தொடங்கி அங்கு கோவில் எழுப்பப்பட்டதாக சொல்கிறார்கள்.
ஏன் கொங்கு திருவண்ணாமலை
இந்த ஆலயத்தை கொங்கு திருவண்ணாமலை என்று அழைப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் தர்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் மலை. ஆனால் மற்ற மலைகளுடன் சேர்ந்து இருக்காமல் தனித்துவமாக இந்த மலை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது போல் இங்கும் கிரிவலப்பாதையில் 8 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஆலய அமைப்பு:
கோவில் சன்னதிக்கு முன்பு முதலில் ஸ்தூபியும், கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம், நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவர் தர்மலிங்கேஸ்வரர் இரண்டே கால் அடி உயரத்தில் உள்ள கற்சிலை ஆகும். கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை தினம் தினம் குளிப்பாட்டும் காட்சி நம் கண்களை வியக்க வைக்கும் காட்சியாகும். கருவறையின் விமானம் தொலைவிலிருந்து பார்க்கும் பக்தர்களின் கண்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் பிறந்த குழந்தையை அழைத்து வந்து இறைவன் சன்னதியில் இறைவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது இங்கு இயல்பாக காணும் காட்சிகளாக உள்ளது. கோவிலில் தமிழ் முறைப்படி மட்டுமே அர்ச்சனைகள், வழிபாடுகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.