புதுச்சேரி
நர்சிங் கல்லூரியில் நிர்வாணமாக ஓடிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
- புதுவை கோரிமேட்டில் அரசு நர்சிங் கல்லூரி உள்ளது.
- அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேட்டில் அரசு நர்சிங் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் வழக்கம்போல் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மாணவிகளை பார்த்து ஆபாச செய்கை செய்தார். மேலும் திடீரென மாணவிகள் முன் சென்று தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஓட தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் அடியனூத்து பகுதியை சேர்ந்த ரகுமான் (வயது 23) என்பதும், இவர் புதுவை ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரகுமானை போலீசார் கைது செய்தனர்.