கோப்பு படம்.
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்
- புதுவை ஒன்றுபட்ட அமைச்சக ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
- கடந்த 32 ஆண்டு காலமாக போட்டித் தேர்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு அடிப்படையிலேயே நிரப்பப்பட்டு வந்தது.
புதுச்சேரி:
புதுவை ஒன்றுபட்ட அமைச்சக ஊழியர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் அதன் பொது செயலாளர் கூறுகையில்:-
புதுவை அரசாங்கத்தில் பணியாளர் சீர்திருத்த துறையின் மூலம் உதவியாளர் பணிகளுக்கு துறை சார்ந்த போட்டித் தேர்வினை நடத்த தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மேல்நிலை எழுத்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 32 ஆண்டு காலமாக போட்டித் தேர்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு அடிப்படையிலேயே நிரப்பப்பட்டு வந்தது.
தற்பொழுது இம்முறையை மாற்றி போட்டித் தேர்வு மூலம் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு கைவிட வேண்டும் என்றும், தற்போது காலியாக உள்ள 600 உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புவதால் வெளியில் படித்துக் கொண்டிருக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தற்போது அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வை கண்டித்தும் எதிர்த்தும் மாகி, ஏனாம், புதுவை ஆகிய பிராந்தியங்களில் சேர்ந்த ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். எனவே அரசு உடனடியாக தேர்வு மூலம் நிரப்புவதை கைவிட்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். இல்லை என்றால் அனைத்து அமைச்சக ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய சூழல் வரும் என எச்சரிக்கை விடுத்தனர்.