புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ரகசிய ஹோமம்: புதிய தலைவராக வைத்திலிங்கம் எம்.பி. இன்று பதவி ஏற்கிறார்

Published On 2023-06-19 04:02 GMT   |   Update On 2023-06-19 04:02 GMT
  • புதுவை காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.
  • ஹோமத்தில் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் இருந்து வந்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை, அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. தொடர்ந்து ஏ.வி. சுப்பிரமணியன் காங்கிரஸ் தலைவராக நீடித்து வந்தார்.

இந்நிலையில் புதுவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் மாநிலத் தலைவர் பதவிகேட்டு, அகில இந்திய தலைமையிடம் அணுகி வந்தனர். அதில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

பதவிக்காக காங்கிரஸ் தலைமைக்கு ஒருவர் மீது ஒருவர் பல்வேறு புகார்களை அனுப்பி வந்தனர். இதனால் மாநிலத் தலைவர் நியமனம் நீண்டுக் கொண்டே சென்றது. இறுதியில் 3 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் தயாரித்தது.

பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் மட்டும் இடம் பெற்றனர். இவர்களில் வைத்திலிங்கம் எம்.பி.யை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், ஒருங்கி ணைப்பாளர் தேவதாசும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து புதுவை காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி.யை நியமித்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

காங்கிரஸ் தலைவராக இன்று மாலை பொறுப்பு ஏற்க உள்ள வைத்திலிங்கம் எம்.பி.க்கு, கூட்டணிக் கட்சி, எதிர்க் கட்சிகளை சமாளிப்பதை விட காங்கிரஸின் உட்கட்சி பூசலை சமாளிப்பதே பிரம்ம பிரயட்தனமாக இருக்கும் என கருதப்படு கிறது.

இதனிடையே புதுவை காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.

ஹோமத்தில் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

Tags:    

Similar News