புதுச்சேரி

புதுச்சேரியில் சாலையோரம் படுத்திருந்த தனியார் கம்பெனி காவலாளி அடித்து கொலை

Published On 2023-06-28 07:22 GMT   |   Update On 2023-06-28 07:22 GMT
  • அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
  • சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.

புதுச்சேரி:

புதுவை சாமிபிள்ளை தோட்டம் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது 57) டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி காளியம்மாள் (எ) காஞ்சனா (வயது 42) இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் மகன் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

குடிபழக்கத்திற்கு அடிமையான முத்துகுமரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி பிள்ளைகளை பிரிந்து சென்றுள்ளார். தற்போது பிளாட்பாரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று புதுவை வெள்ளாழர் வீதி பேங்க் ஆப் பரோடா அருகில் உள்ள வாய்க்காலில் முகத்தில் சிராய்ப்பு காயத்துடன் பின் தலையில் அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.

சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நள்ளிரவு பைக்கில் வந்த 3 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த முத்துகுமரனின் பாக்கெட்டில் பணம் ஏதாவது இருக்கிறதா என கைவிட்டு பார்க்கின்றனர்.

உடனே சுதாகரித்துக் கொண்டு எழுந்த முத்துகுமரன் அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடனே அவர்கள் 3 பேரும் சரமாரியாக அவரை கையால் தாக்குகின்றனர். பின் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர். மயங்கி முத்துகுமரன் அங்கே விழுந்து கிடக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

எனவே அவர்கள் 3 பேரும் அடித்ததில் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து கொலை செய்த 3 பேரையும் போலீசார் பைக் எண்ணை வைத்து தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News