புதுச்சேரி

பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட 3 நாளில் சுயேட்சை ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல்

Published On 2024-03-23 04:16 GMT   |   Update On 2024-03-23 04:16 GMT
  • சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
  • இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

புதுச்சேரி:

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேகனா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் முன்வரவில்லை. 2-வது நாளான நேற்று முன்தினம் சுயேட்சையாக போட்டியிட கூத்தன் என்ற தெய்வநீதி என்பவர் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, 3-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.


ஆனால் கடைசி நேரத்தில் அவர் வேட்பு மனுவை வருகிற 25-ந் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இதுதவிர, நேற்று சுயேட்சையாக கூட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. புதுச்சேரியில் 3 நாள் முடிவில் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

மனு தாக்கல் பெறுவதற்கு 25, 26, 27 என 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் வருகிற 25-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் முகூர்த்த நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என எண்ணி உள்ளனர்.

அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான வருகிற 27-ந் தேதி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News