புதுச்சேரி

தமிழகத்தில் இருந்து பெறப்படும் நிதியை திருப்பி தந்துவிட்டு அமித்ஷா மார்தட்டியுள்ளார்- நாராயணசாமி

Published On 2023-06-12 14:37 IST   |   Update On 2023-06-12 14:37:00 IST
  • புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான்.
  • பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையை சேர்ந்த ரவுடிகள் தமிழக பகுதிகளில் சென்று கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்மூடி உள்ளார்.

என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து குவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோவில் சொத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா 40 சதவீதம் ஊழலில் கமிஷன் பெற்றனர். புதுவையில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீத கமிஷன் பெறுகின்றனர். இது வரும்காலத்தில் 40 சதவீதமாக உயரும்.

கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் புதுவை விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை புதுவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடிதான் நிதி அளிக்கப்பட்டது என்றும், தற்போது ரூ.2½ லட்சம் கோடி பா.ஜனதா ஆட்சியில் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்திலிருந்து பெறப்படும் நிதியை திருப்பித்தந்துவிட்டு மந்திரி அமித்ஷா மார்தட்டியுள்ளார். குஜராத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நிதி வழங்குவதாக கூறி வருகின்றனர்.

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என முதுகெலும்பு உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார்.

புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான். பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். புதுவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழகத்திலும், புதுவையிலும் பா.ஜனதாவுக்கு முடிவு கட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News