புதுச்சேரி

புதுவைக்கு மாநில அந்தஸ்து: என்.ஆர்.காங். - பா.ஜனதா கூட்டணியில் குழப்பம்

Published On 2023-01-20 09:21 GMT   |   Update On 2023-01-20 09:21 GMT
  • சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.
  • முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார்.

புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

மத்திய அரசிடம் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தே முதலமைச்சர் ரங்கசாமி 2011-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார்.

மாநில அந்தஸ்து கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறுவதும், பின்னர் அடங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.

தேர்தலுக்கு பிறகு கோரிக்கை மாயமாகிவிடும். இதேநிலைதான் பல ஆண்டாக நீடித்து வருகிறது. சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு விழாவில் பேசும்போது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படுகிறது என்றும் இது மன உளைச்சலை உருவாக்குவதாகவும் பேசினார்.

இதையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. புதுவையில் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்து வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தி பந்த் போராட்டம் நடத்தியுள்ளது.

அதோடு முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த வக்கீல்கள் சேம்பர் அடிக்கல் நாட்டு விழாவில் மாநில அந்தஸ்து பெற நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

விழாவில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாநில அந்தஸ்து வலியுறுத்தி மனுவும் அளித்தார். இந்த நிலையில் கூட்டணியில் ஆட்சியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா, புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறும்போது, புதுவைக்கு சொந்தமாக மின் உற்பத்தி, கனிம வளங்கள் இல்லாததால் மாநில அந்தஸ்து கொடுத்தால் வளர்ச்சி பாதிக்கும் என்றும் மாநில அந்தஸ்து குறித்த சாதக, பாதகங்களை ஆராய வேண்டும் என்றும், மக்களை பாதிக்காத மாநில வளர்ச்சியை பா.ஜனதா ஆதரிக்கும் என்றும் கூறினார்.

இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவையா? என்ற ரீதியில் பா.ஜனதா மாநில தலைவர் கேள்வி எழுப்பியிருப்பது மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் கோரிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News