புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- விரைவில் பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி
- கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.
புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவ்வப்போது மாநில அந்தஸ்து விவகாரம் அரசியல் கட்சிகளால் விஸ்வரூபம் எடுக்கும். இதற்காக பந்த், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களும் களை கட்டும். ஆனால் மீண்டும் அடங்கிப் போய்விடும். சமீப காலமாக முதலமைச்சர் ரங்கசாமி, அரசுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அதிகாரம் இல்லை என்பதை அரசு விழாக்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.
புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடியை விரைவில் சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் பல முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என கூறினார்.