புதுச்சேரி

 விவசாய நிலங்களை தி.மு.க. கட்சியின் சார்பில் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் பார்வையிட்ட காட்சி. 

நீர்வழிதட ஆக்கிரமிப்புகளால் விளை நிலங்களில் மழைநீர் தேக்கம்

Published On 2023-11-16 06:11 GMT   |   Update On 2023-11-16 06:11 GMT
  • எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
  • புதுவையில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், அவர்களுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை.

புதுச்சேரி:

பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நிர்வாகிகள் கோபால், சன்.சண்முகம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள படுகை அணை, ஏரி மற்றும் குளங்களை பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் நீர் வழித்தடத் தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், அவர்களுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை. காப்பீட்டு நிறுவனங்கள் பயன்பெரும் வகையில் மட்டுமே காப்பீட்டு திட்டம் உள்ளது.

பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் புதுவை விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால் பயிர் காப்பீடு திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகளாக மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள் மற்றும் மழை பாதிப்புகளுக்கான எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. எல்லாவற்றையும் பேசக்கூடிய கவர்னர் இதற்கு பதில் சொல்ல வேண்டும். புதுவை அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News