தனியார் நிறுவன அதிகாரி, விவசாயியிடம் ரூ.18 லட்சம் மோசடி- புதுச்சேரியில் பரபரப்பு
- நீங்கள் அதிக பொருட்கள் வாங்கி இருப்பதால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் உங்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது என்று கூறினார்.
- தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமாரசாமி இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கல்மண்டபத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 47). விவசாயி. இவர் ஒரு வர்த்தக செயலி மூலம் நிறைய பொருட்கள் வாங்கினார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், வர்த்தக நிறுவன மேலாளர் பேசுகிறேன் என முதலில் அறிமுகமாகி கொண்டார்.
பின்னர் நீங்கள் அதிக பொருட்கள் வாங்கி இருப்பதால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் உங்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கேட்ட சில தகவல்களை குமாரசாமி கொடுத்தார். பின்னர் அவர் பரிசீலனை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி குமாரசாமி 2 தவணையாக ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் அவர்கள் காரை அவருக்கு கொடுக்கவில்லை.
மாறாக மேலும் பணம் செலுத்தும்படி கூறினர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமாரசாமி இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து குமாரசாமியிடம் ரூ.8 லட்சத்து 69 ஆயிரம் மோசடி செய்தது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்...
புதுச்சேரியை சேர்ந்தவர் ரோகிணி. தனியார் நிறுவன அதிகாரி. இவருக்கு டெலிகிராம் செயலி மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நீங்கள் இணைய வழியில் முதலீடு செய்தால் தினந்தோறும் 10 சதவீதம் உங்களுக்கு வருமானம் தருகிறோம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய அவர் ரூ.6 லட்சத்து 58 ஆயிரம் முதலீடு செய்தார்.
பின்னர் அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த விமல கோபாலன் என்பவர் ரூ.55 ஆயிரமும் இழந்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.