புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு பெண் ஊழியர்கள் பணி நேர சலுகைக்கு அரசாணை வெளியீடு

Published On 2023-04-29 09:55 IST   |   Update On 2023-04-29 09:55:00 IST
  • அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் நீண்ட காலமாக அரசின் கவனத்தை ஈர்த்தது.
  • அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்த சலுகை பெறக்கூடாது.

புதுச்சேரி:

புதுவை அரசு துறைகளில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் 2 மணி நேர பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

பணிச்சலுகை அறிவிப்பை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசையும் கூட்டாக வெளியிட்டனர். இந்த நிலையில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :-

வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜையை கருத்தில் கொண்டு புதுவை அரசியல் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் நீண்ட காலமாக அரசின் கவனத்தை ஈர்த்தது. இதனை கவனமாக பரிசீலனை செய்து கவர்னர் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் .

காலை 10.45 மணிக்கு மேல் எந்த அனுமதியும் வழங்கப்படாது ஒரு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்படும். சாதாரண விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். தாமதமாக வருகை தந்தால் அதற்கான பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அது 10.55 மணிக்கு மூடப்படும்

அரசு பணி எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்த சலுகை பெறக்கூடாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி சுழற்சி அடிப்படையில் அவர்களுக்கு பணிநேர சலுகை கிடைக்க அனுமதிக்க வேண்டும் .

இந்தச் சலுகை சுகாதாரத்துறை காவல்துறை மற்றும் கல்வித்துறை போன்ற அத்தியாசிய சேவைகள் நேரடி பொது சேவை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு கிடையாது .

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News