ஏனாமில் நடந்த விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்-ஏனாமில் ரங்கசாமி உறுதி
- ஏனாமில் 19-வது மக்கள் கலைவிழா 3 நாட்கள் நடந்தது. ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களை நிறை வேற்றாமல் கலைவிழா நடத்துவதை கண்டித்து, விழாவை புறக்கணித்து தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
- இந்த நிலையில் ஏனாம் கலைவிழாவின் நிறைவுவிழா நடந்தது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏனாம் சென்றார்.
புதுச்சேரி:
ஏனாமில் 19-வது மக்கள் கலைவிழா 3 நாட்கள் நடந்தது. ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களை நிறை வேற்றாமல் கலைவிழா நடத்துவதை கண்டித்து, விழாவை புறக்கணித்து தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டமும் நடந்து வருகிறது.
தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய எம்.எல்.ஏ. அசோக், முதல்-அமைச்சர் ஏனாம் வந்தால் அவருக்கு மக்கள் அவமரியாதை செய்வார்கள் என கூறியதாக தகவல் பரவியது. இது என்.ஆர்.காங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புதுவைக்கு எம்.எல்.ஏ. வந்தால் அவரை சிறை பிடிப்போம் என தெரிவித்து, அவர் மீது போலீசில் புகாரும் அளித்தனர்.
எம்.எல்.ஏ. அசோக், தனது கருத்தை தவறாக சித்தரித்துள்ளனர் என தெரிவித்ததால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.
இந்த நிலையில் ஏனாம் கலைவிழாவின் நிறைவுவிழா நடந்தது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏனாம் சென்றார்.
அவரை டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ், நிர்வாகி முனுசாமி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-
புதுவை மாநிலத்தில் ஜி20 பிரநிதிநிதிகள் கூட்டத்தை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது மாநிலத்திற்குபெருமை தரக்கூடியது. மத்திய அரசிடம் அதிக நிதி பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில குறைகள் உள்ளது. இவற்றை விரைவாக சரிசெய்ய முடியாமல் இருக்கலாம். இதற்கு புதுவை முழு அதிகாரம் இல்லாத மாநிலமாக இருப்பதுதான் காரணம்.
சிலநேரங்களில் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.மத்திய அரசின் உதவியோடு சிறப்பான நிலையை அடைய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். மாநில வளர்ச்சிக்கான எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கைகள், கருத்துக்களை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி ரமேஷ், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பங்கேற்றனர்.