புதுச்சேரி

தேர்தல் கட்டுப்பாடுகளால் மது விற்பனை குறைந்தது

Published On 2024-04-12 05:50 GMT   |   Update On 2024-04-12 05:50 GMT
  • தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
  • கோடை காலம் என்பதால் பீர் விற்பனை அமோகமாக இருக்கும்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசுக்கு அதிக வரிவருவாய் பெற்றுத் தரும் துறைகளில் கலால் துறையும் ஒன்று.

கடந்த காலங்களில் அண்டை மாநிலங்களைவிட புதுச்சேரியில் மது விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது ஏறக்குறைய விலை சமமான அளவு உயர்ந்துள்ளது. ஆனாலும் புதுச்சேரியில் விதவிதமான, பல்வேறு பிராண்டுகளில் கிடைக்கும் மது வகைகள் இன்னும் மது பிரியர்களை ஈர்த்து வருகிறது.

அதோடு சிறிய மதுபார்கள் முதல் 5 நட்சத்திர விடுதி மதுபார், ரெஸ்டோ பார் என பணத்துக்கு தகுந்த வசதிகளோடு மதுபார்கள் புதுச்சேரியில் இயங்கி வருகிறது. இதுவும் மது பிரியர்களை கவர்ந்திழுக்க ஒரு காரணம். வார விடுமுறை நாட்களில் புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழகத்தின் அண்டை மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிவர். ரெஸ்டோபார்களில் அதிகாலை வரை குத்தாட்டம் போட்டு கொண்டாட்டமாக இருப்பார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் மது விற்பனை குறைந்துள்ளது. இரவு நேரங்களில் தான் மதுபாருக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சாதாரண நாட்களில் இரவு 11 மணி வரை மதுபார்கள் இயங்கும். ஆனால் இரவு 11 மணிக்கு பிறகு பார்களில் மது விற்காவிட்டாலும், ஏற்கனவே மது அருந்துபவர்களை வெளியேற்றுவது இல்லை.

இதனால் மது பார்கள் அடைக்க நள்ளிரவாகிவிடும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறையில் இரவு 10 மணிக்கு மதுபார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தாண்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் 9.30 மணிக்கே மதுபார்களில் கடைசி ஆர்டர் பெறப்படுகிறது. இதேபோல மது விற்பனை நிலையங்களில் 9.30 மணிக்கே விளக்குகளை அணைத்து கடையை அடைக்க தொடங்கி விடுகின்றனர்.

ஏற்கனவே தேர்தல் காரணமாக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் மது விற்பனையும் சரிந்துள்ளது. கோடை காலம் என்பதால் பீர் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் இதுவும் தேர்தல் கட்டுப்பாட்டால் குறைந்துள்ளது. மது விற்பனை மதுபார்களில் 20 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News