புதுச்சேரி

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை கவர்னர் தமிழிசை முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.

புதுவை அரசு அறிவிக்காத திட்டத்தையும் செயல்படுத்துகிறது- கவர்னர் தமிழிசை

Published On 2023-01-24 04:22 GMT   |   Update On 2023-01-24 04:22 GMT
  • இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது.
  • இந்தியாவிலேயே பெண்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் முதல் அரசாக புதுவை அரசு விளங்கிக் கொண்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடும்ப தலைவிக்கான ரூ.1000 வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

பெண்களின் கையில் பணம் இருந்தால் அது குடும்பத்திற்கு தான் பயன்படும். அதுதான் நம் தேசத்தின் பண்பாடு. அதை உணர்ந்து அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

பிரதமரின் நிதி ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவிலேயே வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாநிலத்திற்கு பெருமை. மற்றொரு ஆய்வில் 10-ம் இடத்தில் இருந்த புதுவை ஒரே ஆண்டிற்குள் 6-ம் இடத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது. இதை நானாக கூறவில்லை. அதிகாரப்பூர்வமான ஆய்வுகள் சொல்கின்றன. அப்படி என்றால் புதுவை நிச்சயமாக முன்னேறி வருகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை பட்ஜெட்டில் குறிப்பிடாமல் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார் இந்த அரசு அறிவிக்காததை செய்கிறது. சில அரசு அறிவித்தும் செய்யவில்லை. அதை நம் பார்த்துக்கொண்டுள்ளோம்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் முதல் அரசாக புதுவை அரசு விளங்கிக் கொண்டுள்ளது.

இன்னும் பல திட்டங்கள் மக்களுக்காக வர உள்ளது.

இவ்வாறு கவர்னர் பேசினார்.

Tags:    

Similar News