புதுச்சேரி

கோப்பு படம்.

கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்த அரசு திட்டம்

Published On 2023-04-30 08:08 GMT   |   Update On 2023-04-30 08:08 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
  • புதுவைக்கு மேலும் சுற்றுலா பயணி களை அதிகரிக்க ஆலோசனைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை சுற்றுலாத்துறை, வணிக விழா சங்கம் சார்பில் வணிக திருவிழா நடந்தது.

இதில் 10 லட்சத்து 87 ஆயிரம் இலவச கூப்பன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான பரிசு குலுக்கல் கடந்த மார்ச் 21-ந் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு பரிசளிப்பு விழா காந்தி திடலில் நடந்தது.

சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது: -

புதுவையில் புகழ்பெற்ற ஆன்மிக திருத்தலங்கள் உள்ளது. திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடக்கிறது. காரைக்கால் கோவில் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்கி ஆன்மிக சுற்றுலாவுக்காக ஆன்மிக பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர் கோவில் நகரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடற்கரையோரம் பல விடுதிகள் கட்டப்படுகிறது. எந்த அச்சமும் இன்றி சுற்றுலா பயணிகள் தங்கி செல்கின்றனர். புதுவைக்கு மேலும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க ஆலோசனைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கிராமப்புறங்களிலும் சுற்றுலா இடங்களை மேம்படுத்தவும், சிறப்பு மிக்க கீழூரையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதல் பரிசாக 11 பேருக்கு கார், 2-ம் பரிசாக 22 பேருக்கு ஸ்கூட்டர், 3-ம் பரிசாக 110 பேருக்கு மொபைல் போன், 4-ம் பரிசாக ஆயிரத்து 170 பேருக்கு சமையலறை பொருட்கள், 10 ஆயிரத்து 961 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனர் பாலாஜி, வணிக விழா சங்க தலைவர் குணசேகரன், துணை தலைவர்கள் சிவகணேஷ், தணிகாசலம், சங்க செயலாளர் ரவி, இணை செயலாளர்கள் பாலாஜி, ரவி, வேல்முருகன், பொருளாளர் பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News