புதுச்சேரி

புதுவை விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர் கவர்னர் தமிழிசையிடம் மனு அளித்த காட்சி.

நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி செய்துதர வேண்டும்

Published On 2023-09-15 05:01 GMT   |   Update On 2023-09-15 05:01 GMT
  • கவர்னர் தமிழிசையிடம் விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்
  • வேலை வாய்ப்பு மற்றும் மேற்படிப்பு ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில விளையாட்டு வீரர் நல சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நிர்வாகிகள் சதீஷ் சந்துரு, செந்தில் வேல் ஆகியோர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டிற்கு என்று தனியாக விளையாட்டுத்துறை அமைப்பது, விளையாட்டு வீரர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பது, சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட விளையாட்டு வளர்ச்சி ஆணையம் என்பதை தடை செய்ய வேண்டும்.

புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டுப் பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும்.

பல வருடங்களாக கணக்கு காட்டாமல் பல கோடி ரூபாய் விளையாட்டு கவுன்சிலில் முறைகேடு செய்தது மற்றும் எம்.எஸ்.பி. சான்றிதழ் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் மேற்படிப்பு ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம், கோரிமேடு போலீஸ் விளையாட்டரங்கம், லாஸ்பேட் ஹெலி பேடு மைதானம் ஆகிய இடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் மற்றும் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

அனைத்து தொகுதிகளுக்கும் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கங்கள் ஏற்படுத்த வலியுறுத்தியும், விளையாட்டு வீரர்களுக்கு சேர வேண்டிய உதவித்தொகை, ஊக்கத்தொகை, ஓய்வூதியம், இலவச இன்சூரன்ஸ், இலவச பஸ் பாஸ், இலவச விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை நேரடியாக வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை இது குறித்து பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News