புதுச்சேரி

கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட டாக்டர்கள், என்ஜீனியரை படத்தில் காணலாம்.

சென்னையில் இருந்து வாங்கி வந்து மாணவர்களுக்கு சப்ளை: கஞ்சா வியாபாரிகளாக மாறிய டாக்டர்கள்-என்ஜினீயர்

Published On 2023-07-06 07:50 GMT   |   Update On 2023-07-06 07:50 GMT
  • தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
  • தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை கிருமாம் பாக்கத்தில் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது.

கிருமாம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அந்த பகுதியிலிருந்த தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் 2 பேர் டாக்டர்கள் என்பது தெரியவந்தது.

சென்னையை சேர்ந்த பல் டாக்டர் குற்றாலீஸ்வரன்(29), புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன்(26) மற்றும் கடலூர் மாவட்டம் அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் ரவிக்குமார்(29) என தெரியவந்தது.

ரவிக்குமார் ரெட்டிச் சாவடியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது டாக்டர்கள் குற்றாலீஸ்வரனும் கார்த்திகேயனும் டீ கடைக்கு வரும்போது அவர்களுடன் என்ஜினீயர் ரவிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள் முதலில் ஆரோவில் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

அதன்பிறகு தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர். அதில் நல்ல வருமானம் கிடைக்கவே சென்னையை சேர்ந்த கஞ்சா வியாபாரி விக்னேசிடம் கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News