கோப்பு படம்.
கள்ள மெத்தனால் விற்பவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
- அ.தி.மு.க வலியுறுத்தல்
- விஷ மெத்தனாலை வாங்கிய சாராய வியாபாரிகள் யார்-யார்?
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:- மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மெத்தனாலை புதுவை வில்லியனூர் சாராய வியாபாரியிடம் விற்பனை செய்துள்ளனர். இதனை கண்டறிய வேண்டியது புதுவை கலால் துறையின் கடமையாகும்.
புதுவை கலால் துறை ஆணையரான கலெக்டர் இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்.?
விஷ மெத்தனாலை தண்ணீர் கலந்து விற்பனை செய்தால் தமிழகம் போல் இங்கும் பலர் மரணம் அடைய வாய்ப்பு உண்டு. இது எதையும் உணராமல் கலால்துறை ஆணையர் இந்த பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் பாராமுகமாக உள்ளார்.
இது பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிப்பதாக உள்ளது. புதுவை போலீஸ் துறையும், கலால் துறையும் இணைந்து விஷ மெத்தனாலை வாங்கிய சாராய வியாபாரிகள் யார்-யார்? என்பதை அறிந்து அவர்களிடம் இருந்து விஷமெத்தனாலை கைப்பற்ற வேண்டும்.
புதுவையில் அனுமதி பெறப்பட்டுள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு வரக்கூடிய மெத்தனாலை குறுக்கு வழியில் விற்பனை செய்ய பல நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்காவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு புதுவைக்கு ஏற்படும்.
இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.