புதுச்சேரி

அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய காட்சி.

காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியிலேயே தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டது

Published On 2023-05-02 14:18 IST   |   Update On 2023-05-02 14:18:00 IST
  • புதுவை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் ஆவேசம்
  • முதலியார்பேட்டை, ஒத்த வாடை வீதி அருகில் நடந்தது.

புதுச்சேரி:

புதுவை மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் முதலியார்பேட்டை, ஒத்த வாடை வீதி அருகில் நடந்தது.

பொதுக்கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி தலைமை தாங்கினார். பேரவை தலைவர் பரசுராமன், துணைத் தலைவர்கள் கண்ணன், கைலாசம், துணைச் செயலாளர்கள் கேசவன், ஜெய்சங்கர், கஜேந்திரன், வரதன், சரவணன், கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், மாநில பொருளாளர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான செஞ்சி ராமச்சந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் முருகுமணி, புதுவை மாநில செயலாளர் அன்பழகன், தலைமை பேச்சாளர் நள்ளாற்று நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து 200 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

புதுவையில் கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் முழுக்க முழுக்க தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டன. அரசு சார்பு நிறுவனத்தில் பணிபுரிந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆட்சி காலம் முழுவதும் சம்பளம் கூட வழங்கப்படவில்லை. பல அரசு சார்பு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. புதுவையில் இயங்கிய பல தனியார் நிறுவனங்கள் வேறு மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தன. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன. எங்கள் கூட்டணி ஆட்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த கால திமுக, காங்கிரஸ் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு வழங்காமல் தடுக்கப்பட்ட சம்பள பாக்கி, பணி உயர்வு, பதவி உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட அனைத்தையும் செய்துள்ளார். கடந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பாதிக்கப்பட்ட பல்வேறு தொழிலாளர்களும் இன்றைக்கு எங்கள் கூட்டணி கட்சியின் முதல்- அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறி பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News