புதுச்சேரி

பாராளுமன்ற தொகுதியில் போட்டி: கூட்டணி கட்சிகள் பலம் இல்லாததால் அ.தி.மு.க. தவிப்பு

Published On 2024-03-16 03:54 GMT   |   Update On 2024-03-16 03:54 GMT
  • 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது.
  • கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க. வுக்கு கூடுதலாக கிடைக்கும்.

புதுச்சேரி:

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி என மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இடம் பெற்ற கட்சிகளுக்கு புதுச்சேரியில் செல்வாக்கும், வாக்கு சதவீதமும் அவ்வளவாக இல்லை.

கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க. வுக்கு கூடுதலாக கிடைக்கும்.

ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பெறும் ஓட்டுகள், வரும் காலத்தில் கூட்டணி அமைந்தால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூடுதல் சீட் பெற உதவும்.

இதனால் கூட்டணியின்றி தனித்து விடப்பட்ட புதுச்சேரி அ.தி.மு.க.வினர் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News