பாதிக்கப்பட்ட பழங்குடியினரிடம் புதுவை போலீஸ் ஐ.ஜி. சந்திரன் விசாரணை செய்தார். அருகில் சி.பி.சி.ஐ..டி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் உள்ளார்.
பழங்குடியினர் சித்ரவதை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
- உண்மை அறியும் குழுவினர் வலியுறுத்தல்
- பழங்குடி இருளர்கள் மீது கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போட்டுள்ளார்.
புதுச்சேரி:
விழுப்புரம், புதுவையை சேர்ந்த பழங்குடி இருளர்கள், 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் மீது காட்டே–ரிக்குப்பம் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் மீது புகார் அதோடு பழங்குடியினரை 3 நாட்கள் சட்ட விரோதமாக காவலில் வைத்து சித்ரவதை செய்து, பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக மக்கள் உரிமை கூட்டமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் ஆகியவை காட்டேரிகுப்பம் போலீசார் மீது புகார் செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை அறிய மூத்த வக்கீல் மோகன், புதுவை மக்கள் உரிமைக் கூட்ட–மைப்பு செயலளார் சுகுமாரன், காரைக்குடி மக்கள் சிவில் உரிமைக் கழக சிவக்குமார், திருமாவளவன், விழுப்புரம் மக்கள் பாதுகாப்புக் கழக தலைவர் ரமேஷ், புதுவை பழங்குடி மக்கள் விடுதலை இயக்க செயலாளர் ஏனாம்பரம் ஆகியோர் அடங்கிய குழு–வினர் விசாரணை செய்தனர்.
விசாரணை அறிக்கையை வெளியிட்டு மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறியதாவது:-
காட்டேரிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் செங்கல் சூளையில் வேலை செய்த 2 சிறுவர்கள் உட்பட 7 பழங்குடியினரை பிடித்து சட்ட விரோமாக போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்துள்ளார். பழங்குடி இருளர்கள் மீது கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போட்டுள்ளார்.
இவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. போலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் சித்ரவதை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழகம், புதுவை காவல்துறையினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டோ–ருக்கு நிவாரண நிதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பாதிக்கப்பட்ட பழங்குடியின இருளர் குடும்பத்தினர் உடனிருந்தனர்.