புதுச்சேரி

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்ட காட்சி.

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ஜனதா முற்றுகை

Published On 2023-06-13 06:03 GMT   |   Update On 2023-06-13 06:03 GMT
  • அரியாங்குப்பம் தொகுதிக்குட்டபட்ட அருந்ததிபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது.
  • கழிப்பிட வசதி இல்லாததால் வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிஅடைந்து வந்தனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் தொகுதிக்குட்டபட்ட அருந்ததி புரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு கழிப்பிட வசதி இல்லாததால் வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிஅடைந்து வந்தனர்.

இதுகுறித்து பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து முறையிட்டார்.

அதன்பேரில் டி.ஆர்.டி.ஏ. திட்ட அதிகாரி சத்திய மூர்த்தி மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் ஆகியோரை தொடர்பு கொண்டு உடனடி யாக அங்கன்வாடி மையத்துக்கு கழிப்பிட வசதி செய்து தரும்படி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அன்றைய தினமே கழிப்பிடம் கட்டுவதற்காக அங்கன்வாடி மையத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகியும் கழிப்பிடம் கட்டும்பணி தொடங்கப்பட வில்லை.

இதையடுத்து பா.ஜனதா தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமையில் அப்பகுதி பெண்கள் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவல கத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இல்லை. இதை தொடர்ந்து அங்கிருந்த அதிகாரியிடம் கழிப்பிடம் கட்டாதது குறித்து பா.ஜனதாவினர் கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் சரியான விளக்கத்தை அளிக்காததால் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.

இதன்பின்னர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செல்போனில் பா.ஜனதா தலைவர் செல்வகுமாரை தொடர்பு கொண்டார்.

அப்போது உடனடியாக அங்கன் வாடிக்கு கழிப்பிடம் கட்டும் பணியை தொடங்குவதாக உறுதி யளித்தார். இதனையேற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News