பாகூரில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்
- புதிதாக தீமிதி திருவிழாவிற்கென 9 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.
- போஸ்டரை ஓட்டியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை இந்து அறநிலையத்துறை மூலம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவிலுக்கென தனி அதிகாரி இல்லாமல் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் புதியதாக அறங்காவலர் குழுவை தேர்ந்தெடுக்க கூடாது என்று நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறித்து இருந்தது.
இந்த நிலையில் பழமை வாய்ந்த பாகூர் நவ தேவஸ்தான கோவிலான திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்து அறநிலைத்துறை அறங்காவல் குழு உடன் புதிதாக தீமிதி திருவிழாவிற்கென 9 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.
இந்த குழு வரும் 24-ம் தேதி கொடியேற்றத்தில் இருந்து ஜூன் மாதம் 18-ம் தேதி வரை அதிகாரம் இருக்குமென அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியின் போது யாருக்கு அதிகாரம் உள்ளது என இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் எதிராகவும், ஊழல் செய்து இருப்பதாகவும் சர்வே நம்பரை சுட்டிக்காட்டி அவரது சொந்த ஊரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஓட்டியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.