திருமணம் செய்வதாக புதுவை வாலிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த இளம்பெண்
- பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4-ந் தேதி வரை ரூ.5 லட்சம் பாலமுருகன் அனுப்பி இருக்கிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
சேலம் மாவட்டம், பி.என்.பாளையம், சின்ன மண்கொடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (27). வேலை காரணமாக புதுவை வந்துள்ள இவர் தேங்காய்திட்டு வடக்கு தெருவில் தனது நண்பர் மணிகண்டன் என்பவருடன் வசித்து வருகிறார்.
திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் திருமண இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்த 2 நாட்களுக்கு பிறகு ஊர், பெயர் தெரியாத பெண் ஒருவர், பாலமுருகனை அவரது வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, அவரது பெயர் இந்தியஸ்ரீ ராதாகிருஷ்ணன் என்றும், கடலூரில் வசிப்பதாகவும், இணையதளத்தில் புகைப்படம், குடும்ப விவரங்களை பார்த்ததாகவும், அவரை திருமணம்செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பிறகு அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் குடும்ப விவரங்களை பார்த்துவிட்டு, அவருடன் பாலமுருகன் பேச ஆரம்பித்த போது, தன்னுடைய வருமானம் ரூ.15 ஆயிரம் என கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண், தான் கடலூரில் உதவி கலெக்டராக இருப்பதாகவும், ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் பாலமுருகனுக்கு நல்ல வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கிறார்.
மேலும் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலை இருக்கிறது. அந்த வேலையை வாங்குவதற்கு ரூ.5 லட்சம் கேட்கிறார்கள். பணத்தை கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இதை நம்பி அந்த பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4-ந் தேதி வரை ரூ.5 லட்சம் பாலமுருகன் அனுப்பி இருக்கிறார்.
அதன்பிறகு அந்த பெண் பாலமுருகனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவரது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே சம்பந்தப் பட்ட இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது தவறான முகவரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.