செய்திகள்
பழனி முருகன் கோவிலில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்த அமெரிக்கர்கள்.

அரோகரா கோ‌ஷம் முழங்க பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்த அமெரிக்க பக்தர்கள்

Published On 2019-01-10 08:03 GMT   |   Update On 2019-01-10 08:03 GMT
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து அமெரிக்க பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
பழனி கோவிலில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து அமெரிக்க பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசமும், பங்குனி உத்திர திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வரும் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் தற்போதே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர்.

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் டக்ளஸ் புரூக்ஸ். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். சமஸ்கிருதம் மற்றும் இந்துத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு போதித்து வருகிறார்.

தமிழ் கடவுளான முருகப் பெருமான் மீது பக்தி கொண்ட இவர் ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள நண்பர்களுடன் பழனி கோவிலுக்கு வருவது வழக்கம்.

முருகப் பெருமான் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரை சுந்தரமூர்த்தி என மாற்றிக் கொண்டார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நியூயார்க் நகரைச் சேர்ந்த 18 பேருடன் சென்னை வந்தார்.

பின்னர் அங்கிருந்து தனது நண்பர் ஜெகன்நாத்பாபு என்பவரை வழிகாட்டியாக கொண்டு பழனி கோவிலுக் வந்தார். இதில் ஆண்கள் அனைவரும் பட்டு வேட்டி, பட்டு சட்டையும் பெண்கள் பட்டுச் சேலையும் அணிந்து இந்திய பாரம்பரிய முறைப்படி வந்தனர்.

உச்சிகால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த அவர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பி வழிபட்டனர். அமெரிக்கர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பியதை பார்த்து கோவிலில் இருந்த பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். முன்னதாக இவர்களுடன் வந்த பேர்கிளாத் என்ற பெண் பக்தர் மயில் காவடி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். கோவில் நிர்வாகம் சார்பில் அளித்த திருநீரையும் நெற்றியில் பூசிக் கொண்டனர். அதன் பின்னர் திருப்பரங்குன்றம் செல்லப் போவதாக கூறி விட்டு சென்றனர்.
Tags:    

Similar News