செய்திகள்

அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2018-07-27 14:26 IST   |   Update On 2018-07-27 14:26:00 IST
அழகர்கோவில் ஆடிப்பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடிப்பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலையில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிம்மம், அன்னம், அனுமார், சே‌ஷ, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் இன்று (27-ந் தேதி) நடந்தது. அதிகாலையில் பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

பின்னர் காலை 6.20 மணிக்கு கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கோவிந்தா... கோவிந்தா... என்ற கோ‌ஷத்துடன் தேரோட்டம் தொடங்கியது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வீரராகவ ராவ், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., கோவில் தக்கார் வெங்கடாச்சலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, ஜமீன்தார் சண்முக ராஜபாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்களை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் மதுரை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை 8. 55 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. அமைச்சர், கலெக்டர் இறுதி வரை தேரை இழுத்தனர்.

இன்று மாலை பூப்பல்லக்கு நடக்கிறது. சந்திர கிரகணத்தையொட்டி மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 11-ந் தேதி ஆடி அமாவாசையன்று கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

Tags:    

Similar News