செய்திகள்
முகமது ஷமி

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முகமது ஷமி களம் இறக்கப்படுவாரா?

Published On 2019-07-08 10:33 GMT   |   Update On 2019-07-08 10:33 GMT
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 9 லீக் ஆட்டத்தில் 7-ல் வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

நாளை மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்டில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்டு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாகும். இந்த ஆடுகளத்தில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் மான்செஸ்டரில் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. இந்திய அணி தொடக்கத்தில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகிய இரண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. புவிக்கு காயம் ஏற்பட்டபோது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். அவர் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அபாரமாக பந்து வீசினார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினாலும் கடைசி இரண்டு  ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வங்காள தேச அணிக்கு எதிராக பும்ரா, புவி, ஷமி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இந்த ஆட்டத்தில் முதல் 6 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அதன்பின் 3 ஓவரில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இதனால் இலங்கை அணிக்கெதிராக ஷமி இடம் பெறவில்லை. பும்ரா, புவி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. ஹர்திக் பாண்டியா கடைசி இரண்டு போட்டிகளிலும் 10 ஓவர்கள் பந்து வீசினார். இதுவரை பகுதி நேர பந்து வீச்சாளராக பயன்படுத்தப்பட்ட அவர், தற்போது முழு நேர பந்து வீச்சாளராக இந்தியா பயன்படுத்துகிறது.

ஷமிக்கு பதில் ஜடேஜா களம் இறக்கப்பட்டார். இலங்கைக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார். அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் இந்தியாவுக்கு பெரிய தலைவலி உள்ளது.

உலகக்கோப்பை தொடர் தொடங்கும்போது மழை பெய்ததால் பெரும்பாலான ஆட்டங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் மான்செஸ்டரில் நான்கு அணிகள் 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.



நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இதுவரை சோபிக்கவில்லை. மான்செஸ்டர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால்   இந்தியா பும்ரா, புவி, (ஜடேஜா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரில் இருவர்), ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் களம் இறங்கினால் ஒருவேளை பும்ரா மற்றும் புவி பந்துகளை அடித்துவிட்டால், அதன்பின் நேர்த்தியாக பந்து வீச முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லை.

ஷமி அணியில் இடம்பிடித்தால் வேகப்பந்து வீச்சு இன்னும் கூடுதல் பலம் பெறும். ஆனால் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசும் ஷமி, டெத் ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கிறார். யார்க்கர், ஸ்லோ ஒன், கட்டர் பால்கள் அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

முகமது ஷமி அணியில் இடம் பெறாவிடில் ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் இருவர் சேர்க்கப்படலாம்.
Tags:    

Similar News