செய்திகள்
இந்தியா நியூசிலாந்து

அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை

Published On 2019-07-07 10:05 GMT   |   Update On 2019-07-07 10:05 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
12-வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒருமுறை மோதின. ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. மொத்தம் 45 ‘லீக்’ ஆட்டங்கள் நடத்தப்பட்டது. ‘லீக்’ முடிவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தன.

முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு நுழைந்தன. பாகிஸ்தான் 11 புள்ளியுடன் 5-வது இடத்தை யும் இலங்கை 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்கா 7 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தையும், வங்காள தேசம் 7 புள்ளிகள் பெற்று 8 இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் 5 புள்ளியுடன் 9-வது இடத்தையும் ஆப்கானிஸ்தான் புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறின.



இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். முதல் அரையிறுதி ஆட்டம் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மான்செஸ்டரில் மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

2-வது அரையிறுதி ஆட்டம் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) பர்மிங்காமில் மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா- மூன்றாம் இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.
Tags:    

Similar News