உலகம்

அமெரிக்காவில் கொடூரம்... 3 வயது குழந்தையை ரெயில் நிலைய தண்டவாளத்தில் தள்ளிவிட்ட பெண்

Published On 2023-01-02 20:16 IST   |   Update On 2023-01-02 20:16:00 IST
  • ரெயில் வருவதற்குள் ஒரு நபர் குழந்தையை பாதுகாப்பாக இழுத்து பிளாட்பாரத்திற்கு அழைத்துச் சென்றார்.
  • குழந்தையை தள்ளிவிட்ட பெண் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில், ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தன் தாயுடன் நின்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையை பின்னால் இருந்த ஒரு பெண், ஈவு இரக்கமின்றி தண்டவாளத்தில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவை மல்ட்னோமா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலக இணையதளத்தில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய பெண், 32 வயது நிரம்பிய பிரியன்னா லேஸ் வொர்க்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் குழந்தையை தள்ளிவிட்டு எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி மீண்டும் இருக்கையில் அமர்ந்தார்.

பிளாட்பாரத்தில் நின்றிருந்த மற்றவர்கள் இதைப் பார்த்து பதறிப்போனார்கள். உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, தண்டவாளத்தில் இருந்து குழந்தையை தூக்க ஓடினர். ரெயில் வருவதற்குள் ஒரு நபர் குழந்தையை பாதுகாப்பாக இழுத்து பிளாட்பாரத்திற்கு அழைத்துச் சென்றார். இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்ததில் குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. பிளாட்பாரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இந்த கொடூரமான செயலுக்கு மன்னிப்பே கிடையாது, அந்த பெண் ஏன் அப்படிச் செய்தார்? என்று புரியவில்லை என ஒரு பயணி குறிப்பிட்டார்.

குழந்தையை தள்ளிவிட்ட பெண் கைது செய்யப்பட்டு, அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்காமல் அவரை காவலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News