அபுதாபியில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
- அபுதாபி-துபாய் சாலையில் ஷஹாமா என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, அவர்களது கார் விபத்தில் சிக்கியது.
- விபத்தில் பலியானவர்களின் உடல்கள், துபாயிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் துபாயில் வேலை பார்த்து வந்ததால், அங்கேயே தனது மனைவி ருக்சானா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அபுதாபியில் நடந்த விழாவிற்கு அப்துல் லத்தீப், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றார்.
பின்பு அவர்கள் அனைவரும் தங்களது காரில் துபாய்க்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அபுதாபி-துபாய் சாலையில் ஷஹாமா என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, அவர்களது கார் விபத்தில் சிக்கியது.
இதில் அப்துல் லத்தீப்பின் மனைவி ருக்சானா, குழந்தைகள் ஆஷாஸ்(வயது14), அம்மார்(12), அயாஷ்(5) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், அவர்களுடன் பயணம் செய்த வீட்டு வேலைக்கார பெண் புஷ்ராவும் இறந்துவிட்டார். இந்த விபத்தில் அப்துல் லத்தீப் காயத்துடன் உயிர்தப்பினார். விபத்தில் பலியானவர்களின் உடல்கள், துபாயிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, கேரளாவில் உள்ள அப்துல் லத்தீப்பின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.