உலகம்

உலகத் தலைவர்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை.. ரஷியாவின் போர் நிறுத்தத்தை நிராகரித்த ஜெலன்ஸ்கி

Published On 2025-05-04 16:07 IST   |   Update On 2025-05-04 16:07:00 IST
  • இந்த வெற்றி அணிவகுப்புக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலகத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
  • நாங்கள் உங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

உக்ரைன் - ரஷியா போர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முடிவின்றி நடைபெற்று வருகிறது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று முதல் முறையாக 1 நாள் மட்டும் தாற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இதற்கிடையே இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த மாதம் ரஷியாவில் வெற்றி அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த வெற்றி அணிவகுப்புக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலகத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.

எனவே இதனை முன்னிட்டு மே 8 ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10 ஆம் தேதி இறுதி வரை 72 மணி நேர போர்நிறுத்தத்தை  ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். மேலும் உக்ரைன் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவின் போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளார்.

ரஷியாவின் அழைப்பின் பேரில் வரும் 9 ஆம் தேதி ரெட் சதுக்க அணிவகுப்பைக் காண வரும் வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

ரஷிய பிரதேசத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, அவர்கள் உங்களைப் பாதுகாப்பார்கள். நாங்கள் உங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

இதற்கிடையில், உக்ரைனில் ரஷிய ஆளில்லா விமானம் மற்றும் டிரோன்கள் நடத்திய தாக்குதலில் 47 பேர் காயமடைந்தனர். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் 12 பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடந்தன.

இந்த தாக்குதலில் கட்டிடங்கள், பொது உள்கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. உக்ரைன் அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்தத் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News