வெனிசுலாவின் எண்ணெய் வளம் அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் - டிரம்ப் பேசிய வீடியோ வைரல்
- எங்களிடம் அங்கே நிறைய எண்ணெய் இருந்தது. அவர்கள் எங்கள் நிறுவனங்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.
- இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல, நாங்கள் சொன்னதைச் செய்வோம்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.
இதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கம் செலுத்த அமெரிக்காவின் நடவடிக்கை என்றும் கருத்து நிலவுகிறது.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்காவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள்தான் வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளை உருவாக்கி, சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டி, தொழிலை நடத்தி வந்தன.
2007ல் அப்போதைய அதிபர் ஹியூகோ சாவேஸ், அமெரிக்க நிறுவனங்களின் வசமிருந்த எண்ணெய் கிணறுகளை அரசுடைமை ஆக்கினார். வெனிசுலாவின் எண்ணெய் வெனிசுலாவுக்கே சொந்தம், அமெரிக்காவிற்கு இதில் பங்கு இல்லை என்று கூறி அமெரிக்க நிறுவனங்களை வெளியேற்றினார்.
இந்நிலையில் வெனிசுலா எண்ணெய் வளங்கள் குறித்து டிரம்ப் கடந்த மாதம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் டிரம்ப், " வெனிசுலா ஒரு அழகான நாடு. அது மிகவும் வளமான நாடு. ஆனால், இப்போது அது ஒரு தவறான நபரால் (நிக்கோலஸ் மதுரோவால்) ஆளப்படுகிறது. அவர் அந்த நாட்டைச் சீரழித்துக்கொண்டிருக்கிறார்.
அவர்கள் எங்கள்(அமெரிக்க நிறுவனங்களின்) எண்ணெய் உரிமைகளைப் பறித்தார்கள். எங்களிடம் அங்கே நிறைய எண்ணெய் இருந்தது. அவர்கள் எங்கள் நிறுவனங்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.
நாம் அங்கே எதையும் விட்டு வந்திருக்கக் கூடாது, அந்த எண்ணெயை நாமே எடுத்திருக்க வேண்டும். நாங்கள் அவற்றை இப்போது திரும்பப் பெற விரும்புகிறோம். இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல, நாங்கள் சொன்னதைச் செய்வோம்." என்று டிரம்ப் பேசியுள்ளார்.