காஷ்மீர் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை - அமெரிக்கா உறுதி
- காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடி பிரச்சனை என்பதே அமெரிக்காவின் நீண்டகால கொள்கை.
- காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதை இந்தியா-பாகிஸ்தானிடமே விட்டுவிட்டோம்.
நியூயார்க்:
காஷ்மீர் பிரச்சனை இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சனையில் 3-ம் நபர் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடி பிரச்சனை என்பதே அமெரிக்காவின் நீண்டகால கொள்கை. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவை நிறுத்துவதில் விருப்பம் இல்லை' என தெரிவித்தார்.
மேலும் அவர், 'அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கையில் போதுமான பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதை இந்தியா-பாகிஸ்தானிடமே விட்டுவிட்டோம். எந்த பிரச்சனை தொடர்பாகவும் அமெரிக்காவிடம் உதவி கேட்டால் செய்வதற்கு தயாராக உள்ளோம்' என்றும் கூறினார்.
அதேநேரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடந்த ராணுவ மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் உதவினார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.