உலகம்

உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை: அடுத்த வாரம் ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறேன் - டிரம்ப் அறிவிப்பு

Published On 2025-08-09 09:25 IST   |   Update On 2025-08-09 09:25:00 IST
  • அலாஸ்காவில் புதினை சந்திப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
  • ஒருவருக்கொருவர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க டிரம்ப் வலியறுத்த உள்ளார்.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் அடுத்த வாரம் ரஷிய அதிபர் புதினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் புதினை சந்திப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த சந்திப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக உக்ரைன் - ரஷியா இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க டிரம்ப் வலியறுத்த உள்ளார்.

பிப்ரவரி 2022 இல் ரஷ்யா தொடங்கிய படையெடுப்பு உக்ரைனில் லட்சகணக்கான கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போரை நிறுத்துவதற்கான முந்தைய மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இந்த சூழலில், டிரம்ப்-புதின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜெனீவாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் புதினுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் சந்திப்பது இதுவே முதல் முறை.   

Tags:    

Similar News