உலகம்

ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?: அமெரிக்க அதிபர் டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

Published On 2025-08-15 14:27 IST   |   Update On 2025-08-15 14:27:00 IST
  • ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
  • ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாஷிங்டன்:

நேட்டோ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்தது. இதில் உக்ரைன் சேர்ந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து என கருதிய ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது.

3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்து விட்டனர். இருந்த போதிலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் இரு தரப்பினர் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் புதினுடன் அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்திப்புக்கு பிறகு டிரம்பை சந்திக்க புதின் ஒப்புக்கொண்டார்.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் டிரம்ப்-புதின் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின்போது உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புதினுக்கு டிரம்ப் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரி விதிப்பை காரணம் காட்டி அவர் புதினுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நான் 6 மாதங்களில் 6 போர்களை தீர்த்து விட்டேன். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியா தயாராக உள்ளது. புதின் ஒரு ஒப்பந்தத்தை காண விரும்புகிறார் அவர் அதை செய்வார் என நினைக்கிறேன். நான் அதிபராக இல்லாவிட்டால் அவர் முழு உக்ரைனை கைப்பற்றி இருப்பார் என நினைக்கிறேன். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் முத்தரப்பு சந்திப்பை நோக்கி நகர்வதே தனது இலக்கு. நாங்கள் உக்ரைனுக்கு எந்த நிதி உதவியும் அளிக்கவில்லை. ஆனால் நாங்கள் ராணுவ உபகரணங்களை வழங்குகிறோம்.

அதுவும் 100 சதவீதம் நேட்டோ நாடுகள் மூலம் வழங்குகிறோம். உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியபோது நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் நடந்து இருக்காது.

எங்களது 2-வது சந்திப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளும் சந்திப்பாக இருக்கும்.

இது தொடர்பாக புதின் கூறும்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக டிரம்ப் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார். இரு தலைவர்களும் 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நேரில் சந்திக்க உள்ளனர்.

ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. 1959-க்கு பிறகு அமெரிக்கா மாகாணங்களில் ஒன்றாக அலாஸ்கா மாறியது. ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது உடன்பாடு ஏற்படாவிட்டால் ரஷியாவுக்கு மிக கடுமையான பொருளாதார தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு தோல்வியடையும் பட்சத்தில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படலாம் என அமெரிக்க நிதி மந்திரி ஸ்காட் பெசன்ட் கூறி உள்ளார். இதனால் டிரம்ப்-புதின் சந்திப்பை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Tags:    

Similar News