உலகம்

மோடி எப்போதும் எனக்கு நண்பர்தான்: டிரம்ப் திடீர் பல்டி

Published On 2025-09-06 10:50 IST   |   Update On 2025-09-06 10:50:00 IST
  • சீனாவிடம் இந்தியாவை இழந்ததற்கு நாங்கள் காரணம் இல்லை என்று நினைக்கிறேன்.
  • ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்ததையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வரி விதிப்பு நடவடிக்கையை டிரம்ப் எடுத்தார். இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் 3 தலைவர்கள் சேர்ந்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள். இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும் போது, இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் அமெரிக்கா இழந்துவிட்டது போல் தெரிகிறது. அவர்கள் ஒன்றாக வளமான எதிர்காலத்தை பெற்று கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த டிரம்ப் அதிலிருந்து பல்டி அடித்து உள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேட்டி அளித்தபோது, இந்தியாவை, சீனாவிடம் இழந்ததற்கு யார் காரணம்? என்றும் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பீர்களா? என்றும் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது:-

சீனாவிடம் இந்தியாவை இழந்ததற்கு நாங்கள் காரணம் இல்லை என்று நினைக்கிறேன். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதுபற்றி நான் அவர்களுக்கு தெரியப்படுத்தினேன்.

மேலும் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தோம். இது மிக அதிகமான வரி. மோடியுடன் நான் மிகவும் நன்றாகப் பழகுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

அவர் 2 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தார். அப்போது நாங்கள் ரோஸ் கார்டனுக்குச் சென்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினோம். மோடி எப்போதும் எனக்கு நண்பர் தான். அவருடன் எப்போதும் நட்புறவுடன் இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். அதேவேளையில் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை.

ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. அது பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன.

இந்தியா மற்றும் பிற நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவருடனும் நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம். கூகுள் உள்பட அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News