உலகம்

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு- மேயர் உள்பட 18 பேர் பலி

Update: 2022-10-06 05:12 GMT
  • மெக்சிகோவில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் அந்நகர மேயர் உள்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • தொலைதூர நகரமானது மெக்சிகோவின் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றான டேரா கலிண்ட்டியில் உள்ளது.

மெக்சிகோவின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலாபன் என்ற நகரில் சிட்டி ஹால் உள்ளது. இந்த கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.

அவர்கள் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் அந்த கட்டிடத்தின் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் அந்த கட்டிடத்தில் இருந்த பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்

மர்ம கும்பல் நடத்திய இந்த வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் மெக்சிகோ மேயர் கான்ராடோ மெண்டோசா மற்றும் அவரது தந்தையும், முன்னாள் மேயருமான ஜுவான் மென்டோசா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் சில அரசு ஊழியர்களும் உயிர் இழந்தனர்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்தவர்கள் சிட்டி ஹால் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனால் அந்த பகுதி ரத்த காடாக காட்சி அளித்தது. அந்த கட்டிடத்தின் பல இடங்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருந்தது.

இந்த சம்பவத்திற்கு லாஸ் டெக்வலிரோஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. ஆனால் இதனை மெக்சிகோ அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை மர்ம கும்பல் படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது. இது வைரலாக பரவி வருகிறது

இந்த சம்பவத்தை தொடர்ந்து மெக்சிகோவில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு கும்பலை பிடிக்க அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேயர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது கோழைத்தனமான தாக்குதல் என அக்கட்சி தெரிவித்து உள்ளது.

சமீபகாலமாக மெக்சிகோவில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மத்திய மெக்சிகோ மாநிலமான குவானா ஜூவாடோவில் உள்ள மதுக்கடை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு வடக்கு மெக்சிகோவில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006-ம் ஆண்டு அரசு போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து இது போன்ற சம்பவங்கள் தொடர் கதை போல நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News