உலகம்

தென் கொரியாவுக்கு வந்த அமெரிக்க போர்க்கப்பல்... ஏவுகணை சோதனை நடத்தி பதிலடி கொடுத்த வடகொரியா

Published On 2022-09-25 06:30 GMT   |   Update On 2022-09-25 06:30 GMT
  • அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது.
  • வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சியோல்:

ஐ.நா. சபையின் தடை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அரசாங்கம் அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்த சோதனை செய்கிறது. குறிப்பாக, எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனிடையே, அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது. ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க போர் கப்பல் தென் கொரியா வந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க போர் கப்பலின் தென் கொரிய வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. குறுகிய தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையானது கடுமையான ஆத்திரமூட்டல் என்று தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வடகொரியா மீறுவதாகவும், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகளம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News